தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராமாயண தொடர்கள் அனைத்தும், ஓர் உண்மையை மறைத்து விட்டன.
பதிநான்கு ஆண்டுகள், களையாத, வெட்டப்படாத, சடையான ஜடாமுடி, சவரம் செய்யப்படாத தாடி-மீசையுடன் முகம், முரட்டுத்தனமான மரஉரி, பாதுகை அணியாத கல்லிலும், முள்ளிலும், திரிந்த பாதங்கள், இந்த கோலத்தில் இராமன்.
இராமனின் இந்த கோலத்தை மனதில் நிறுத்தி எண்ணி பார்க்க வேண்டும். இத்தகைய வெளிப்புறத் தோற்றம், எவருமே அழகென கருத இடமில்லை; இருந்தும், அனைவரும் இராமனை நேசித்தனர்.
இன்று, நம் இடையே, இந்த கோலத்தில் இராமன் இருந்தால், நாம் என்ன செய்வோம்?
நம் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், நாம் இதுவரையில் செய்துள்ள செயல்களை, கொண்ட நிலைப்பாடுகளை கருத்தில் கொண்டு நம்மை நாமே ஆராய்ந்தால், நம் வேஷம் அகன்று, அசல் கண்ணுறப்பெறுவோம்.
தம்பி, நீ இத்தனை நாள், மனமுருகி ஆராதித்து வந்த இராமன் நான்தானப்பா. இப்பொழுதுதான், பதிநான்கு ஆண்டுகள் வனவாசம் பூர்த்தி செய்து விட்டு, காட்டில் இருந்து ஊருக்கு வந்துள்ளேன்.
இன்னையா சொல்ற? நீ...இராமனா? இன்னையா இப்பிடி கீரே?
சிக்கு பிடிச்ச தல, செம்பட்ட மயிறு, ஒட்டிய வயிறு, மூஞ்சி தெரியாத கணக்கா மயிறு, எண்ணையே பாக்காத சொரசொரப்பான தோலு, கண்ட கண்ட காயும் கனியும் உண்டு, இடுங்கி போன கண்ணு, செருப்பு போடாத, விரிஞ்சு போன வெடிச்ச காலு, கருத்த தோலு, உரிச்ச மரப்பட்டைய இடுப்புல சுத்திகுனு, அரை நிர்வாண கோலம், கையில ஒரே ஒரு வில்லு, முதுகுல ஒரு அம்பு கூடை, ...
நீ... எதுக்கும் ஒரு இருபது அடி தள்ளி நில்லு...
ஆட்சி, அதிகாரத்தை துறந்து, பதிநான்கு ஆண்டுகள் காட்டில் கழித்து, மனைவி சிறைப்பிடிக்கப்பட்டு மீண்டாள் என்ற கூற்றுடன், இந்த கோலத்தில் திரும்பி வரும் ஒரு மனிதன், இன்றைய சமூகத்தில், மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர இயலுமா?
இன்றைய குடிகளாகிய நாம் அனுமதிப்போமா?
ஏற்றுக்கொள்வோமா?
குணலாவண்யத்தை விட, வெளிப்புறத் தோற்றத்திற்கு, மதிப்பளித்து, மதிப்பளித்து, நாம் குணத்தை விட, கொண்ட கோலத்திற்கு அடிமைகளாகி விட்டோம், என்பதே உண்மை., அதுவே மனிதர்களாக நம் வீழ்ச்சிக்கு காரணம்.
வறட்டு செல்வதால் அடையும் வெளிப்புற தோற்ற அழகிற்கு அடிமையாகாமல், நற்குணங்களை ஆராதித்து, வளர்த்துக் கொள்ள முயல்வோம்.
எளிமையான வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை, பரோபகார குணம், விடுபட்ட மனம் கொண்டு நிம்மதி அடைய முயல்வோம்.
ஸ்ரீ ராம ஜெயம்.
No comments:
Post a Comment