கர்ம பலன்
பிரம்மனை தன் நாபி கமலத்தில் தோற்றுவித்த மகாவிஷ்ணு, பிரம்மன் தன் கடமை ஆற்ற வேதத்தை அருளினார்.
தான் அருளிய வேதத்தை, பிரம்மன் தொலைத்து விட்டாலும், வேதத்தை காக்க வேண்டிய கர்மம், மகவிஷ்ணுவை மச்சமாக ஜனிக்க செய்தது!
மச்சமாக ஜனித்த மகாவிஷ்ணு, வேதத்தை ரக்ஷித்து கொடுத்ததன் பலன், பொறுமையின் சின்னமான கூர்ம ஜனனம்.
இருப்பினும், கடலின் அடியில், பாதாளத்தின் அருகில் வாசம் செய்ய நேர்ந்தமையால், பூமியை பிளந்து வாழும் வராகமாக ஜனனம்.
ஆயினும், பூமியை காத்து கடமை ஆற்றியதால், தரணியின் மீது பிறக்கும் வாய்ப்பு, ஆனால், பாதி விலங்கும், மீதி மனிதனுமான நரஸிம்ஹ ஜனனம்.
நரஸிம்ஹ ஜனனத்தின் உக்ரம், எல்லை கடந்து, மக்களை துன்புறுத்தியதன் கர்ம பலன், குட்டை மனிதனாக பிறந்து, வாமனனாக கை ஏந்தி யாசகம் பெற்று, மீண்டும் தரணியை காத்து அருளியது!
அப்படி, அடங்கி, ஒடுங்கி, யாசகமாக பெற்று, தான் காப்பாற்றிய தரணியை, பொல்லா மனம் படைத்த அரசர்கள், அறம் தவறி, கொடுங்கோல் ஆட்சி செய்து, மக்களை துன்புறுத்தியது கண்டு சகியாமல், வெகுண்டு, பரசுராமனாக ஜனித்து, துஷ்ட அரசர்களை வதைத்து ஒழித்து, தன் கர்மாவை அதிகரித்துக் கொண்டது!
துஷ்ட அரசர்களை வன்முறையால் கண்டித்ததன் விளைவு, ஒரு அரசன் எவ்வகையில் தன் வாழ்க்கையை நடத்த வேண்டும் என உதாரணம் படைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் மகாவிஷ்ணு. அதன் விளைவே, இராம ஜனனம்!
ஒரு யோக்கியமான அரசனாக வாழ்ந்து காட்டிய பிறகும், திருந்தாத மக்களுக்கு தர்மத்தை போதிக்க எடுத்த பிறப்பு, கிருஷ்ணன். ஆயினும், கடந்த பிறவியில், தலைமகனாக ஜனித்து, அரசனாக திகழ்ந்ததால், தன் சொந்த வாழ்வில், தன் நிலையில், தவறு ஏதும் செய்யாதிருந்தும், பல கஷ்டங்களை அனுபவித்ததின் விளைவு, தலைமையிலும் – அரசபோகங்களிலும் வெறுப்பு கொண்டு, இளையவனாகவும்- இடையனாகவும் பிறப்பு எடுத்தவன் கண்ணன்.
உதாரண புருஷனாக வாழ்ந்து காட்டி, பிறகு, லோகத்தின் ஆசானாக, நன்முறையில் தர்மங்களை உபதேசிதத்த பிறகும், நாம் நெறி தவறி, அறம் துறந்து, தர்மம் பிறழ்ந்து செயல்படுவது, எல்லை கடந்தால், கரத்தினில் ஏந்திய வாளுடன், பரி மீது ஆரோகனித்து, துஷ்ட-சிக்ஷன, சிஷ்ட-ரக்ஷண பரிபாலனம் செய்ய வருபவர் கல்கி.
ஆக, அனைத்தும், கர்ம பலன்.
கர்ம பலனில் இருந்து விடுபட்டு, நான்- எனது எனும் எண்ணம் நீக்கி, பற்று கடந்து, ஆத்ம ஸ்வரூபமாக நிலைத்து, நிம்மதி அடைய வாய்ப்புண்டு.
அதன் முதல் படி, குருவினிடம் பரிபூரண சரணாகதி.
https://sabariganesh23.sarahah.com/
No comments:
Post a Comment